ஜெ., சமாதியில் பட்ஜெட் பெட்டியுடன் போஸ் கொடுத்த ஜெயக்குமார்!

சட்டசபையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகும் முன்பாக நிதியமைச்சர் ஜெயக்குமார் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்று அந்த பெட்டியுடன் அளித்த போஸ்தான் ஹைலைட்.

தமிழக நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக கட்சித்தலைவர், முதல்வரிடம் சென்று ஆசி பெறுவது வழக்கம். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக இருந்த போது பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவார். இருவரும் இணைந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள்.

ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்று தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

ஜெயலலிதா மறைந்த பின்னரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், அவரது நினைவிடத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஜெயக்குமார் சட்டசபைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பட்ஜெட் அறிக்கை அடங்கிய பெட்டியை ஜெயலலிதாவிடம் கொடுத்து ஆசி பெற்றார்.

சட்டசபையில்தான் நிதியமைச்சர்கள் பட்ஜெட் பெட்டியுடன் போஸ் கொடுப்பார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நிதியமைச்சர் போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா சமாதியில் அவரது போட்டோ முன்பு பெட்டியுடன் நின்று போஸ் கொடுத்தார் ஜெயக்குமார்.

ஜெயலலிதாவின் ஆசி பெற வந்ததாக கூறினார் ஜெயக்குமார். தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆசி கிடைக்குமா? தமிழகத்தின் கடன்சுமை குறையுமா? பார்க்கலாம்.