கோவாவில் ஆட்சியமைக்கத் தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுங்கள்: ராகுலுக்கு எம்.எல்.ஏ. கடிதம்

அண்மையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முதல் 2 மாநிலங்களில் பா.ஜனதாவும், பஞ்சாபில் காங்கிரசும் அபார வெற்றி கண்டு ஆட்சியை கைப்பற்றின.

அதே நேரம் மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. என்றபோதிலும் கோவாவில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று உடனடியாக ஆட்சி அமைத்து விட்டது. இதேபோல் மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கிறது.

தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க முதலில் அழைப்பு விடுக்காமல், பா.ஜ.க.வை ஆளுநர் அழைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஆனால், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாரிக்கர் பதவியேற்க தடை விதிக்க மறுத்தது. ஆனால், வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கோவாவில் ஆட்சியமைக்கத் தவறிய காங்கிரசார் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வாஜித் ரானே ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு ரானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவா சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டனர். ஆனால் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சரியாக செயல்படவில்லை. அவர்கள் அனுபவமிக்கவர்கள், ஆனால் ஆட்சியமைக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் செயலை பார்க்கும்போது, கோவாவில் ஆட்சியமைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

டெல்லியிருந்து கோவா வந்த மனோகர் பாரிக்கர் குறுகிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, 21 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைத்து விட்டார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் இதற்கு பதில் அளிக்கவில்லையென்றால் அதற்கு மேலும் கட்சியில் நீடிக்க நான் தகுதியானவன் இல்லை என்றே நினைக்கிறேன். சக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி பதில் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது. என்ன நடக்கப் போகிறது என இன்னும் 2 நாட்களில் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.