நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டார். சட்டத்தை மீறியதாகக் கூறி அவரை பதவிநீக்கம் செய்து அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக சோய் சூன்-சில் செயல்பட்டதற்கு பார்க் கியூன்-ஹை ஆதரவு அளித்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் சாசன நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி பார்க் கியூன்-ஹை, குற்றவியல் விசாரணை நடைமுறைகளை சந்திக்க வேண்டி இருப்பதால், விரைவில் தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தென் கொரியாவின் முதலாவது பெண் அதிபராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பார்க் கியூன்-ஹை, அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது அதிபர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பார்க் கியூன்-ஹை-க்குப் பதிலாக, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகிய 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.