விமானத்தில் பயணம் செய்தபோது ஹெட்போன் வெடித்து பெண் காயம்

சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஒரு பெண், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

பயணத்தில் அலுப்பு தட்டாமல் இருப்பதற்காக அவர் பேட்டரியால் இயங்குகிற ‘ஹெட்போன்’ மின்னணு சாதனத்தை தலையில் பொருத்தி பாடல்களைக் கேட்டு கொண்டே வந்தார்.

அப்படி பாடல்கள் கேட்ட நிலையில் அவர் உறங்கியும் விட்டார்.

ஆனால் திடீரென ஏதோ ஒன்று வெடித்தது போன்று சத்தம் கேட்கவே அவர் கண்விழித்துப் பார்த்தார். அப்போதுதான் அவர் தனது முகத்தில் எரிவது போன்று உணர்ந்தார். கண நேரத்தில், எல்லாம் தனது ‘ஹெட்போன்’ மின்னணு சாதனத்தால் வந்த வினைதான் என்பதை உணர்ந்து அவர் அதைக் கழற்றி வீசி எறிந்தார்.

இருப்பினும் அவரது முகத்தின் ஒரு பகுதி கருகி காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து ஒருவர் காயம் அடைந்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

அந்த ‘ஹெட்போன்’ சாதனம் எரிந்து கருகியதின் விளைவாக விமானத்தில் பயணம் செய்த சக பயணிகள் அனைவரும் இருமிக்கொண்டே வந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பேட்டரியால் இயங்குகிற மின்னணு சாதனங்களை விமான பயணத்தின்போது பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.