ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் எனாவோ என்ற புயல் மடகாஸ்கரை தாக்கியது. முன்னதாக இப்புயல் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 290 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரோன்ட் செட்ரா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன.
இந்நிலையில் இந்த புயலுக்கு உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 18 பேரை காணவில்லை என்றும் பேரிடர் மேலாண்மை தேசிய பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புயல் மழை காரணமாக அன்டாலாகா மற்றும் கேப் மசோயலா பகுதிகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்புயலுக்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.