ஆர்.கே நகர் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. அடித்து சொல்கிறார் மண்ணின் மைந்தன் மருதுகணேஷ்!

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளதால் அவர்களை பணத்தால் யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பல முனை போட்டி நிலவுகிறது. எனினும் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக ஆகிய வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுகவின் சார்பில் வழக்குரைஞரும், பத்திரிகை நிருபருமான மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.

50000 வாக்கு வித்தியாசமாம் இதுகுறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில், நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். திமுகதான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் அனைத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

தொகுதிவாசி இந்நிலையில் மருதுகணேஷ் கூறுகையில், ஆர்.கே நகர் தொகுதியில் பிறந்து வளர்ந்த சாமானியன் நான். பணத்தை காட்டிலும் மக்களின் மனதை சம்பாதித்துள்ளேன். மண்ணின் மைந்தனான என்னை அறிந்து வைத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களை, பணத்தைக் கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

பிரசாரம் தினகரன் என்ன, யார் வந்தாலும் அவர்களை வீழ்த்துவேன். திமுகவின் சாதனைகளையும், பினாமி அரசின் மக்கள் விரோத போக்கையும் எனது பிரசாரத்தில் முன்வைத்து வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.