கோலியின் குற்றச்சாட்டு தவறானது: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்!!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. புனே போட்டியை காட்டிலும் பெங்களூரு டெஸ்டில் இரு அணி வீரர்களும் அதிக அளவில் சீண்டிக் கொண்டனர்.

பெங்களூர் டெஸ்ட் போட்டியின்போது டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவதற்கு பெவிலியனில் இருந்த சக வீரர்களின் உதவியை சுமித் நாடிய விவகாரம் மோதலின் உச்சக்கட்டமாக உருவெடுத்தது. சுமித்தின் இந்த செயலுக்கு விராட் கோலி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாளை மூன்றாவது போட்டி தொடங்க உள்ள நிலையில், டிஆர்எஸ் முறைக்காக ஓய்வறையின் உதவியை நாடியதாக விராட் கோலி குற்றஞ்சாட்டுவது தவறானது என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

என்னுடைய பார்வையிலிருந்து பார்த்தால் அது முற்றிலும் தவறானது. நான் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து தவறு செய்ததாக விராட் கோலி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தவறாக கூறியுள்ளார் என நான் நினைக்கிறேன்.

இந்த டெஸ்டைப் பொறுத்தவரை நாங்கள் பாதிவழி கடந்து விட்டோம். இந்த டெஸ்ட் குறித்து நாங்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். இது ஒரு நல்ல டெஸ்டாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது.