இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ராஞ்சியில் டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டி.ஆர்.எஸ். சர்ச்சை குறித்து நிறைய பேசியாகி விட்டது. எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். இத்தகைய மோசமான நிகழ்வு நடக்கக்கூடாது.
டி.ஆர்.எஸ். பிரச்சினை பெங்களூரு டெஸ்டுடன் முடிந்து போன கதை. இப்போது நாங்கள் ராஞ்சியில் இருக்கிறோம். அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இங்கு கிரிக்கெட் தான் எல்லாமே. மற்றவற்றை ஒதுக்கி விட வேண்டும். கிரிக்கெட் வீரர்களாக இதை நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.
டி.ஆர்.எஸ். விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் குறித்து நான் என்ன கூறினேன் என்பதை நினைத்து பார்க்கிறேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. அதே சமயம் அது பற்றியே தினமும் பேசிக்கொண்டிருப்பது முட்டாள் தனமானது.
அதை விட்டு நகர்ந்து போட்டியில் கவனத்தை செலுத்த விரும்புகிறேன். இந்த டெஸ்டுக்கு முன்பாக கிடைத்த ஓய்வு நன்றாக இருந்தது. இந்த ஓய்வில் குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே நாங்கள் அலசிக்கொண்டிருக்கவில்லை. இன்னும் 2 டெஸ்டில் நாங்கள் விளையாட வேண்டி உள்ளது. அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு கோலி கூறினார்.