பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் ரொம்பவும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் பாகுபலி-2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
டிரைலரின் தொடக்கத்திலேயே பாகுபலி மக்கள் மத்தியில் கிரீடத்தின் மீது தனது ரத்தத்தால் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும்படியான காட்சி அமைந்திருக்கிறது. அந்த காட்சியைத் தொடர்ந்து ரத்தம் படிந்த ஒரு பெண்ணின் கை, ரம்யாகிருஷ்ணனின் காலை தொடுவது, ரத்தம் படிந்த கத்தி படியின் மீது ஏற்றிச் செல்வது என்று இரண்டாம் பாகத்தில் நிறைய ரத்தமும், போரும் இருப்பதை உணர்த்துகிறது.
அனுஷ்காவின் வாள் வீச்சை இந்த டிரைலரில் அழகாக காட்டியிருக்கிறார்கள். இதற்கு முன் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ‘ருத்ரமாதேவி’ படத்தில் அவருடைய வாள் வீச்சு ரொம்பவும் செயற்கையாக இருந்தது என்ற பெயர் இருந்தது. ஆனால், இந்த படத்தில் வாள் வீச்சுக்கு ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
ஒரு கை செயலிழந்தவராக வந்த நாசர், ஒரு தூணை தூளாக்கும் காட்சிகள் எல்லாம், அவருக்குள்ளும் ஒரு வீரன் ஒளிந்திருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு பாகுபலி என்று உரக்க கூறும் காட்சி உண்மையிலேயே நமக்குள்ளும் ஒரு வெறியை தூண்டி விடுகிறது.
அரண்மனை காட்சிகள், போர்க் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருக்கின்றன. முந்தைய பாகத்தைவிட இந்த பாகம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருப்பதுபோலவே டிரைலரில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒருசில காட்சிகளால் படத்தில் தொய்வு இருக்கும் என்று நினைக்கும்படியும் சில காட்சிகளை காட்டியிருக்கிறார்கள்.
முதல்பாதியில், தமன்னாவுடன், பிரபாஸ் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தன. இந்த பாகத்தில் அனுஷ்காவுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடுமோ? என்ற அச்சம் இருக்கிறது. அனுஷ்கா அரசியாக மட்டும் இல்லாமல், போர் வீராங்கனை போலவும் இந்த டிரைலரில் காட்டியிருக்கிறார்கள்.
இந்த டிரைலரில் குறைசொல்ல வேண்டியது பின்னணி இசைதான். சாதாரண ஒரு கமர்ஷியல் படத்துக்கு போடப்படும் பின்னணி இசையைப்போல் கொடுத்து, ரசிக்க வேண்டிய விஷயங்களை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது. அதேபோல், நிறைய காட்சிகள் இதுவெல்லாம் கிராபிக்ஸ்தான் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக, யானை சிலைக்கு கீழே ஓடும் ஆற்றில் ஒரு படகு நிற்பதுபோன்ற காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் அழகாக தெரிகிறது.
அதேபோல், போரின்போது, பிரபாஸ் பிரமாண்ட போர் கருவியின் மேல் நடந்துவந்து சண்டை போடும் காட்சிகள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. முந்தைய பாகத்தில் பலமே அதில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தும், அது தெரியாமல் ரொம்பவும் நேர்த்தியாக, தத்ரூமாக அமைத்திருந்ததுதான். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதில் எல்லாம் குறைகள் இருக்குமோ? என்ற அச்சம் நிலவியிருக்கிறது.