இலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து! எச்சரிக்கை

தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோய் அச்சம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

நாட்டில் பருவ மழையைத் தொடர்ந்து வரும் காலப் பகுதியில் டெங்கு நோயாளர் தொகை அதிகரிப்பதும், பின்னர் குறைவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால், பருவ மழையின் போது நீர் தேங்கும் இடங்கள் குறித்து அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதேசங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அண்மைக் காலத்தில் சற்று மந்தநிலையை அடைந்தமையும் டெங்கு தாக்கத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.

டெங்கு தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2088 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100 பேர் பாதிப்புக்குளானதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கூறியுள்ளார்.

இது பொதுமக்கள் மத்தியில் டெங்குநோய் தொடர்பில் அதிகளவு அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

இதன்காரணமாக கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட 66 பாடசாலைகள் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள், பணிகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இருந்த போதிலும், இவ்விடயங்களில் பொதுமக்கள் பாராமுகமாக இருந்து, பின்னர் அவதியுறுவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக மழைக்காலங்களில் அதிகம் குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படுகின்றது. சந்தைகளில் அகற்றப்படாத நீண்ட நாட் குப்பை மேடுகள் காட்சியளிக்கின்றன.

வீதியோர வடிகான்களின் நிலையோ மிகவும் அவலமாக உள்ளது. நீரோட்டமின்றிக் காணப்படும் வடிகான்களில் நீருடன், குப்பை, கூளங்களும் சேர்ந்து சுகாதாரத்திற்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளன.

இவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுப்பட வேண்டும். இவ்வாறான சந்தரப்பத்தில் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது சுட்டிக்காட்டபட வேண்டிய விடயமாகும்.