சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்ட, சுமணன் எனும் இளைஞனின் உடலில் 06 வெளிகாயங்களும் 16 உள்காயங்களும் காணப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைகளுக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கிற்கு பலர் சாட்சியமளித்திருந்தனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் 8 சாட்சியங்களை வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றது.
எட்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். ஒரு சந்தேகநபருக்கு எதிராக மன்றினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில்,
கொள்ளை சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட சுமணன் “கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக” தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பொலிஸாரின் வாகனத்தில் வட்டக்கச்சி பகுதிக்கு சுமணனை அழைத்து சென்றனர். வட்டக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் வைத்து 26ஆம் திகதி மதியம் 12.10 மணியளவில் சந்தேகநபரான சுமணன் தப்பி ஓடியதாகவும், பின்னர் மாலை 3 மணியளவில் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சுமணனின் உடல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த உடலில், இடது முழங்கையின் கீழ் பகுதி, மணிக்கட்டு பகுதி, இடது தோள் பட்டை பகுதி வலது முழங்கையின் கீழ் பகுதி மற்றும் மணிக்கட்டு பகுதி ஆகிய இடங்களில் உராய்வு காணப்பட்டதாகவும், வலது மற்றும் இடது மணிக்கட்டு பகுதியல் காணப்பட்ட காயமானது கைவிலங்கு இடப்பட்டமையால் ஏற்பட கூடிய காயத்திற்கு ஒத்ததாக காணப்பட்டது எனவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
இடது தோள் பட்டை, இடுப்பு பகுதியின் பின் புறம், இடுப்பு பகுதியின் கீழ் புறம், பிட்டம், வலது பிட்டத்தின் மேல் பகுதி, கீழ் பகுதி, முழங்காலின் மேற்பகுதி, கீழ் பகுதி, இடது காலின் மேல் பகுதி, கீழ் பகுதி உள்ளடங்கலாக 16 கண்டல் காயங்கள் உடலில் காணப்பட்டன.
கண்ணின் கீழ் பகுதி இமை பகுதியின் கீழ் பகுதியில் இரத்தம் உறைந்து காணப்பட்டது. சிறு இரத்த கசிவும் காணப்பட்டது. கழுத்து பகுதி தலைபகுதி மண்டையோட்டு பகுதிகளில் காயங்கள் இல்லை. சுவாசப்பை விரிவடைந்து இருந்தது. இரைப்பையில் ஆயிரம் மில்லி லீட்டர் நீர் இருந்தது.
இந்த மரணம் நீரில் மூழ்கியதால் தான் ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் 22 ஆவது சாட்சியமான உப காவல்துறை பரிசோதகர் ஜெயரட்ன சில்வா, 26 ஆவது சாட்சியமாக விசேட சட்ட வைத்திய அதிகாரி திலக் அழகியவண்ண ஆகியோரே குறித்த தகவலை நீதிமன்றில் தெரிவித்தள்ளனர்.
இதையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு நீதிபதி மா. இளஞ்செழியன் ஒத்திவைத்துள்ளார். அதுவரையில் சந்தேகநபர்களை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.