பதவியால் எதிர்ப்பு இனத்தால் ஒற்றுமை!

மகிந்த தரப்பும் மைத்திரி – ரணில் தரப்பும் பதவிப் போட்டிகளில் எதிர்ப்பு நிலை கொண்டுள்ளனரே தவிர, இனத்தால் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் நன்கு உணர வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றிருந்தால் என் அத்தியாயம் முடிந்து போயிருக்கும் என்ற பொருள்பட கூறியிருந்தார்.

அதே மைத்திரிபால சிறிசேன சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது மகிந்த ராஜபக்ச­ ஆட்சியில் இருந் தால் கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இத்துணை பிரயத்தனம் செய்திருக்க மாட்டார் என்று கூறுமளவில் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதில் கடுமையாகப் பாடுபட்டுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி பதவியைத் தனதாக்கிக் கொண்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச­ மீது கொண்ட பகைமையையும் மறந்து, அவரை சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றினார்.

கூடவே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியாக இருந்த போதிலும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் மகிந்த ராஜபக்ச­வைக் காப்பாற்றுவதே தன் இனத்துக்குத் தான் செய்யும் பேருதவி என்று நினைத்தார்.

அதற்காக அவர் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வாதிட்டார்.அவரின் கருத்துக்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அங்கீகரிப்பதாக அமைந்து போக, மின்சாரக் கதிரையில் இருந்து மகிந்த ராஜபக்­வைக் காப்பாற்றினேன் என்று மங்கள சமரவீர பிரமாதமாகக் கூறினார்.

இந்தச் சம்பவத்தை இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கணம் நிதானமாக உற்று நோக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றிருந்தால் இன்று என் அத்தியாயம் முடிந்து போயிருக்கும் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச­வின் முதல் எதிரியாக இருக்கக்கூடிய மங்கள சமரவீர போன்றவர்கள் அரசியல் பழிகளைத் தீர்ப்பதைத் தவிர்த்து, மகிந்த ராஜபக்ச­வைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இதற்கு முழுக்காரணம் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போர் செய்து வெற்றியைப் பெற்றுத்தந்த மகிந்த ராஜபக்சவைத் தண்டிப்ப தானது சிங்கள இனத்துக்குத் தாம் செய்யும் துரோகத்தனம் எனவும்,மாறாக மகிந்த ராஜபக்ச ­ தண்டிக்கப்பட்டால் அது தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை – ஊக்கத்தைக் கொடுத்து விடும் என்பதாகக் கருதப்பட்ட தாலுமே மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதில் நல்லாட்சி தீவிரமாக இருந்தது.

அதேநேரம் எங்கள் தமிழ் அரசியல் தலைமையோ விடுதலைப் புலிகளைக் குறை கூறுவதிலும் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது மகா தவறு என்று கூறி தங்களை நியாயவாதிகளாக, நடுநிலையாளர்களாகக் காட்டுவதிலுமே கருத்தாய் இருக்கின்றனர்.

இதனால் தான் தமிழினம் இன்றுவரை அடிமைப்பட்ட இனமாகவும் சிங்கள இனம் ஆளும் இனமாகவும் இருக்கிறது.