ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், பூலோகம் முழுவதிற்கும் சக்கரவர்த்தியாகி இந்தியாவை வல்லராக மாற்றுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த வரும் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். தே.மு.தி.க. வேட்பாளராக மதிவாணன் களத்தில் உள்ளார். மேலும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் பலமுனைப் போட்டி உருவாகி உள்ளது.
இந்நிலையில் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுவை செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த தொகுதி தேர்தல் அலுவலரிடம் இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மேள தாளம் முழங்க குடைபிடித்தப்படி ஊர்வலமாக வந்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தாம் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளதாகவும் ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மால்களில் 15 வருட அனுபவம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தனியொரு மனிதனாக யுனிவர்சல் பிரதர் மூவ்மென்ட் பார்ட்டி என்ற கட்சியையும் நிறுவியுள்ளார் ராஜ்குமார்.
இதைவிட சிறப்பாக பூலோகம் முழுவதிற்கும் சக்கரவர்த்தியாகி இந்தியாவை வல்லராக மாற்றுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ், ஆங்கிலம், பேச படிக்க எழுத தெரியும் எனவும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சுயேட்சை வேட்பாளர் அக்னி ராமச்சந்திரன் என்பவர். வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது டெபாசிட் பணத்திற்கு ரொக்கத்திற்குப் பதில் டெபிட் கார்டை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். ஸ்வைப் வசதி எல்லாம் கிடையாது என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதையடுத்து, மோடி சொன்னது என்ன, டிஜிட்டல் இந்தியாவில் இப்படியெல்லாம் மறுக்கலாமா என்று கேட்டுள்ளார். ரொக்கம் அல்லது காசோலையாகத்தான் தர வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். என்று கூறினார். இதையடுத்து நீண்ட நேர வாதத்திற்குப் பின்னர் ரொக்கமாக டெபாசிட்டைக் கட்டி விட்டுச் சென்றுள்ளார் இந்த சுயேட்சை வேட்பாளர்.