அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவை சேர்ந்த நிக்கி ஹாலே டிரம்ப் அவையில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க சுகாதாரத் துறையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க சுகாதார அமைப்பு 130 மில்லியன் அமெரிக்கர்களுக்கான காப்பீடுகளை பராமரித்து வருகிறது. அதன் தலைமை பொறுப்பிற்கு சீமா பொறுப்பேற்று உள்ளார்.
அமெரிக்க சுகாதாரத் துறைக்கு ஒரு சிறந்த தலைவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது துணை அதிபர் மைக் பினேஸ் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க செனட் இதனை உறுதி செய்தது. சீமாவை தேர்வு செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 55-43 என கணக்கில் சீமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே டிரம்ப் தலைமையிலான அமைச்சரவையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் தலைமைப் பொறுப்பை சீமா ஏற்றுள்ளார்.
மருத்துவத்தில் தனியார் துறையில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த சீமாவுக்கு அமெரிக்க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது அவரது துறையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.