இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து தனது ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித் 117(244) ரன்களுடனும், மேக்ஸ்வெல் 82(147) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதில் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் ஆட்டத்தின் 40-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஹேண்ட்ஸ்காம்ப் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்தார். பந்து பவுண்டரி லைன் நோக்கி சென்ற பந்தை கேப்டன் கோலி பாய்ந்து தடுத்தார். அப்போது அவரது வலது தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் பீல்டிங் செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவரது காயம் பெரிய அளவில் இருக்குமோ என்ற அச்சம் நிலவியது. மேலும் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்குவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் வலது தோள்பட்டையில் தீவிரமான காயங்கள் ஏதும் இல்லை என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தோள்பட்டை காயத்திற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விராட் கோலி, வேகமாக குணமாகி வருவதாகதெரிவித்துள்ளது. மேலும் இந்த காயம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
மேலும் போட்டி நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கோலி சிகிச்சை பெற்றுக்கொள்ள உள்ளதாக பிசிசிஐ மருத்துவக்குழு கூறியுள்ளது.
இதுகுறித்து பீல்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் காயம் பெரிய அளவிற்கு மாறிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகத்தான் அவரை பீல்டிங் செய்ய அனுமதிக்கவில்லை. அவர் வேகமாக சென்றதால் வலது தோள்பட்டை பலமாக தரையை தாக்கியது’’ என்றார்.
மேலும் ஒருவேளை நாளை காலை போட்டியின் போது அவர் பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை என்றால், இந்திய அணி பேட்டிங்கின் போது அவர் தனது ஆட்ட வரிசையில் 4வதாக இறங்காமல், கீழ் வரிசையில் களமிறங்குவார் என்றும் ஸ்ரீதர் கூறினார்