வெஸ்ட் இண்டீஸ் தொடர்: 4 வருடத்திற்குப் பிறகு பாக். அணியில் இடம்பிடித்தார் கம்ரான் அக்மல்

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்தவர் கம்ரான் அக்மல். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் இடம்பிடித்திருந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்திருந்தார். அதன்பின் அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்கவில்லை.

அக்மலின் விக்கெட் கீப்பிங் பணியில் தொய்வு ஏற்பட்டதால் சர்பிராஸ் அகமது விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அந்த இடத்தை சிறப்பாக தக்கவைத்துக் கொண்ட சர்பிராஸ் அகமது தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 11 போட்டிகளில் ஒரு சதத்துடன் 353 ரன்கள் குவித்தார். மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படவே, அவருக்கு தற்போது தேசிய அணியில் நான்கு வருடத்திற்குப் பிறகு இடம் கிடைத்துள்ளது.

35 வயதாகும் கம்ரான் அக்மல், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 53 டெஸ்ட், 154 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அக்மலுடன் பேட்ஸ்மேன் அஹமது ஷேசாத்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், முன்னாள் கேப்டன் அசார் அலி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து நான்கு டி20, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மார்ச் 26-ந்தேதி தொடங்கி மே 14-ந்தேதி வரை நடக்கிறது.