இனி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு இருக்காதாம்… சுஷ்மாவுடன் ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் உறுதி!

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழக மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக டெல்லி சென்ற அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையே நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது,

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்கள் பிரச்சனையில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி வந்தோம். 45 நிமிடங்கள் மத்திய இணை அமைச்சரோடு விவாதித்தோம். அதன் அடிப்படையில் நாங்கள் எடுத்து வைத்தக் கோரிக்கைகள் இதுதான்.

பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்கள் அமைதியான முறையில் தொழில் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகளை மத்திய அரசு செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மீனவர்களை சிறைபிடிக்கக் கூடாது. சுடக் கூடாது. அடிக்கக் கூடாது. சித்திரவதை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். பிடிக்கப்பட்ட விசைப் படகுகள் 136 இலங்கையில் உள்ளன. அந்தப் படகுகளை உடனடியாக எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும்.

எங்களது இந்தக் கோரிக்கைகளை கனிவோடு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் அமைதியான முறையில் மீனவர்கள் தொழிலை செய்ய வழிவகைகள் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மீனவர்கள் சுடப்படுவது, அவர்களின் வலைகளை அறுப்பது, படகுகளை பிடித்துச் செல்வது என்பது இனி இருக்காது என்ற உறுதியையும் அமைச்சர் வழங்கி இருக்கிறார். இலங்கை வசமுள்ள 136 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையே மீனவர்கள் பிரச்சனை குறித்து 4 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் 90 சதவீதம் அளவிற்கு உடன்பாடு எட்டக் கூடிய நிலையில் உள்ளது. இலங்கை அரசின் கருத்துப்படி, சுருக்குமடி, இரட்டை மடி ஆகிய வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கோரியுள்ளனர். தமிழகத்தில் இந்த இரண்டு மடிகளும் தடை செய்யப்பட்டுள்ளதை நாங்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

இழுவலை பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை சார்பில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மீனவர்களின் கருத்தைக் கேட்டு சொல்வதாக கூறியிருக்கிறோம். எதிர்க்காலத்தில் இழுவலை இல்லாமல் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.