சசிகலாவை உறவினர்கள் கைவிட்டு விட்டனரா?.. ஒரு வாரமாக யாருமே பார்க்கலையாமே??

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அவரின் உறவுகளான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

சதி செய்து சம்பாத்தியம் செய்வதற்காகவே இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேநேரம், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

இதையடுத்து எவ்வளவோ முயன்றும், உச்சநீதிமன்றம் கால அவகாசம் தர மறுத்ததால் பிப்ரவரி 15ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்தனர். அவர்கள் அன்று மாலையே பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா, இளவரசி ஆகியோர் பெண்கள் சிறையிலும், சுதாகரன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாத காலத்தில், சசிகலாவை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அதிமுக துணை பொதுச்செயலாளரும், சசிகலாவின் அக்கா மகனுமான டிடிவி தினகரன் கடந்த மாதத்தில் 2 முறை சசிகலாவை சந்தித்தார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சந்தித்தனர். இளவரசி மகன் விவேக், மருமகள் கீர்த்தனா ஆகியோர் சிலமுறை சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, சசிகலாவை சிறையில் சந்திக்கவில்லை. பிற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை. கட்சியின் நிர்வாகிகளும் சென்று சந்திக்கவில்லை என்பதால் சசிகலா தனித்துவிடப்பட்டதை போல உணருகிறார்.

அதிலும் குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சசிகலாவை சந்திப்பார் இல்லை. கட்சிக்காரர்கள் என்றில்லை, உறவினர்களும் அவரை சந்திக்க வரவில்லை. கட்சியினர், உறவினர்களின் சந்திப்பு இல்லாததால் சசிகலா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.