சர்ச்சைக்குரிய இரகசிய சித்திரவதை முகாம்! யஸ்மீன் சூகாவுக்கு இலங்கை பதிலடி

இலங்கையில் ஜோசப் முகாம் என்ற இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று இருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ள கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதிலடி கொடுத்துள்ளார்.

இலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம் இருக்கின்றதா இல்லையா என்பது குறித்து ஆராய்வதற்கு யஸ்மீன் சூகாவை இலங்கைக்கு வந்து ஆராய்ச்சி நடாத்துமாறு தாம் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதற்கு முன்னரும் யஸ்மீன் சூகா இலங்கையில் சித்திரவதை முகாம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரை இலங்கைக்கு வந்து ஆராய்ச்சிகளை நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.

அதன்படி அவரும் இலங்கைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார். குறித்த ஜோசப் முகாமையும் பார்வையிட்ட பின்னர் சித்திரவதை முகாம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியின் போது சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கலாம். ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறான இரகசிய சித்திரவதை முகாம்கள் இல்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதை நேரடியாகவே இலங்கைக்கு வந்து அனைத்து இடங்களையும் பார்வையிடலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர யஸ்மீன் சூகாவிற்கு பதில் கொடுத்துள்ளார்.