ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ படகிலேயே உயிரிழந்தார்.
மீனவர் படுகொலைக்கு நீதி கேட்டும், கச்சத்தீவை மீட்கக்கோரியும் பாமக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு மத்திய அரசு இலங்கை அரசை எச்சரிக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்வது இப்போது நிகழும் குற்றமல்ல. 1983ம் ஆண்டு முதல் இன்று வரை மீனவர்கள் தொடச்சியாக படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 800க்கும் அதிகமாகும்.
மேலும், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், இறந்த மீனவர் குடும்பத்திற்கு இலங்கை அரசிடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத்தர வேண்டும் என்று நாளை ராமேஸ்வரத்தில் தொடர் முழக்கப்போராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவரும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.