நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பஸ் மீது, பாதாள உலக குழுவினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளலாம் என தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விமலுடன் இன்னும் ஒருவரை அழைத்துச் சென்றால், அவர் மீது படும் துப்பாக்கிச் சூடு இவர் மீதும் படாதிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
நாட்டில் பொது மக்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினையுள்ளது. வெளியில் இறங்கி நடந்து செல்வது பயமாகவுள்ளது. நிம்மதியாக தூங்க முடியாமல் உள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க சென்றால் அவர் உண்மையிலேயே ஜனாதிபதியாக செயற்படுகின்றாரா இல்லை என்றால் பிரதமர் செயற்படுகின்றாரா என தனக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.