மின்சார நாற்காலி பற்றி தற்போது நினைவில்லை!

மின்சார நாற்காலி பற்றி தற்போது சிலருக்கு நினைவில்லை என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் மின்சார நாற்காலி பற்றி பேசி கூச்சலிட்டவர்கள் அது பற்றி மறந்து விட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மார்ச் மாதங்களில் இவர்களின் அவலக் குரலை கேட்க முடியாத நிலை காணப்பட்டது.

சிலர் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் மின்சார நாற்காலி பற்றி பேசி பேசி பிரச்சாரம் செய்தனர்.

இன்று மின்சார நாற்காலி இருக்கின்றதா என்பதே தெரியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் மின்சார நாற்காலி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

நாட்டில் எவரேனும் போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவார்களானால், ஊடகவியலாளாகளை கடத்தி கொலை செய்வார்களாயின், சாதாரண மக்களுக்கு தொல்லை கொடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் பற்றி பதிவாகியிருந்தது. எனினும் அந்தக் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென யார் கூறினாலும் அந்த பரிந்துரை நிராகரிக்கப்படும்.

எமக்கு வலுவான நீதிமன்றமும் திறமையான நீதிபதிகளும் இருக்கின்றார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.