ஐ.தே.கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கும் சுதந்திரக் கட்சி

நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ள அமைச்சுக்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை எப்படியாவது இணங்க வைத்து அமைச்சரவை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இந்த நெருக்கடியை உருவாக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் அணியினர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு பல்வேறு யோசனைகளை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரை இந்த அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் இலக்காக இருந்து வருகிறது.

இவர்கள் மூவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். இவர்களை நீக்க மேற்கொள்ளும் முயற்சியின் மூலம் உள்நோக்கம் தெளிவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

இவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புகளில் இருந்து நீக்கி விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அந்த பதவிகளில் நியமிக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அந்த முயற்சி தோல்வியடைந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாம் வரிசை உறுப்பினர்களை அமைச்சு பதவிகளில் நியமிக்க சுதந்திரக் கட்சியின் முயற்சித்து வருகின்றனர்.

முக்கிய அமைச்சு பொறுப்புகளில் இரண்டாவது அணியினர் நியமிக்கப்பட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்டாயம் நெருக்கடி உருவாகும். இந்த நெருக்கடியை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் இந்த யோசனைக்கு ஜனாதிபதி இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி அண்மை நாட்களில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெளியாகி வருவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.