மக்கள் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், தேமுதிக சார்பில் மதிவாணன் போட்டியிடுகின்றனர்.
எம்.ஜி.ஆர்-அம்மா பேரவை சார்பில் தீபா போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே தீபாவின் கணவர் மாதவனும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கங்கை அமரன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.கே.நகர் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன். மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.