ஜப்பானை அச்சுறுத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏவுதளத்தில் இருந்து H-2A ராக்கெட் மூலம் ரேடார் 5 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை விண்ணில் இருந்தபடி உளவு பார்க்கும் என அந்நாட்டு விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வட கொரியா அடுத்தடுத்து இதுபோன்ற மேலும் சில ஏவுகணைகள் தங்கள் நாட்டின் மீது வீசினால் அந்த நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று ஜப்பான் ராணுவம் திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் சமீபத்தில், ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியாவின் ஏவுகணைகள் வந்து விழுந்த இடத்தின் அருகேயுள்ள மீன்பிடிக்கும் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நகரத்தில் இந்தப் போர் ஒத்திகை நடைபெற்றது.
அபாய சங்குகள் ஒலித்ததும் பெரியவர்களும் மாணவ – மாணவியரும் எப்படியாவது பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்று தங்களது உயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் இன்றைய ஒத்திகை அமைந்திருந்ததாக உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர்.