வடகொரியாவை உளவு பார்க்கும் புதிய செயற்கைக்கோளினை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அவ்வப்போது ஜப்பானை அச்சுறுத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏவுதளத்தில் இருந்து H-2A ராக்கெட் மூலம் ரேடார் 5 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய செயற்கைக்கோள் ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை விண்ணில் இருந்தபடி உளவு பார்க்கும் என அந்நாட்டு விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டு வடகொரியா நடுத்தர வகையை சேர்ந்த கண்டம் விட்டு பாயும் ஏவுகணையினை ஜப்பானை நோக்கி மேற்கு பசிபிக் பகுதியில் செலுத்தியது. இதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் உளவு செயற்கைக்கோகள்களை ஜப்பான் விண்ணில் செலுத்தி வருகிறது.
ஜப்பான் விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைக்கோளின் முக்கிய பணி உளவு பார்க்க தகவல்களை சேகரிப்பதே ஆகும். மேலும் இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்டுள்ளது.