கிம் ஜாங் நம் படுகொலை: சர்வதேச போலீஸ் உதவியை நாடுகிறது மலேசியா

வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நம் படுகொலை விவகாரம், நாளும் ஒரு திருப்பத்தை சந்தித்து வருகிறது.

இப்போது, கொல்லப்பட்டவர் கிம் ஜாங் நம்தான் என்பதை வடகொரியா ஏற்க மறுத்து விட்டது. அவர் கொல்லப்பட்டபோது, வேறு ஒரு பெயரில் ராஜ்யரீதியிலான பாஸ்போர்ட் வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது.

ஆனால் அவரது குழந்தையின் மரபணு மாதிரியை, கிம் ஜாங் நம்மின் மரபணு மாதிரியுடன் ஒப்பிட்டு பரிசோதித்து, கொல்லப்பட்டவர் கிம் ஜாங் நம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக மலேசியா கூறுகிறது.

இந்த வழக்கில் இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா (25), வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வடகொரியா பிரஜைகள் 7 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மலேசியா நம்புகிறது.

இதில் 4 பேரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் மூலம் மலேசியா நடவடிக்கை எடுத்து ‘ரெட் நோட்டீஸ்’ (சர்வதேச பிடிவாரண்டு) பெற்றுள்ளது.

இதுபற்றி கோலாலம்பூர் போலீஸ் தலைவர் காலித் அபுபக்கர் நேற்று கூறுகையில், “கொலை நடந்தபோது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த வடகொரியா பிரஜைகள் 4 பேர், அந்த சம்பவத்தை தொடர்ந்து மாயமாகி விட்டனர். அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்துவிட முடியும் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.