10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் கேமராவுடன் கூடிய ஹெல்மெட் அணிந்து விளையாடும் முறையை அறிமுகப்படுத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன், களத்தில் எந்த மாதிரி செயல்படுகிறார் என்பதை மிக துல்லியமாக காண முடியும்.
இது ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக அமையும். ஹெல்மெட்டில் பொருத்தப்படும் கேமராவும், பேட்டரியும் 100 கிராம் எடைக்கும் குறைவாகவே இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் கிரிக்கெட்டில் இந்த நவீனமுறை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.