இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்யவில்லை.
நேற்றிரவு ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காயம் பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது. இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டி என்பதால் கோலி பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கோலி பேட்டிங் செய்வார் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணயின் முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான கவாஸ்கர், தேவைப்பட்டால் மட்டுமே கோலி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கோலியின் காயம் பெரியதாக இல்லை. ஆனால், அவர் ஒரு மனிதன்தான். ஆகையால், மைதானத்தில் களம் இறங்கி விளையாடத்தான் ஆசைப்படுவார். உண்மையிலேயே, அவர் பீல்டிங் செய்யாமல் இருப்பது, அவர்கள் என்ன சொன்னார்களோ, அதை சற்று அதிகமாகத்தான் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் நான்காவது போட்டிக்கு உடற்தகுதி பெற முடியும்.
இந்திய அணியின் விக்கெட்டுக்கள் திடீரென சரிந்து, ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் முன்னிலை வகிக்க விடக்கூடாது என்ற நிலை வந்தால் மட்டுமே விராட் கோலி பேட்டிங் செய்ய வேண்டும். கோலி பேட்டிங் செய்யாமல் இருப்பது மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பொறுத்துதான் இருக்கிறது. தற்போது வரை ஆடுகளம் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது. ஆடுகளத்தில் பெரிய அளில் டர்ன் இல்லை. மோசமான பவுன்ஸ், சீமிங்கும் இல்லை. இந்தியா நாளை முழுவதும் பேட்டிங் செய்வது அவசியம். அவர்கள் முழு நேரம் பேட்டிங் செய்தால் விராட் கோலிக்கு நாளை முழுவதும் ஓய்வு கிடைக்கும்.
ரகானே 4-வது வீரராகவும், கருண் நாயர் ஐந்தாவது இடத்திலும், அஸ்வின் 6-வது இடத்திலும், சகா 7-வது இடத்திலும் களம் இறங்க வேண்டும். அவர்கள் பேட்டிங் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, நாளை முழுவதும் பேட்டிங் செய்தால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்னை நெருங்க முடியும். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அதிக அளவில் முன்னணி பெற்று விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.