இரட்டை இலை சின்னம் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்கும் சசிகலா அணி!

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து 21-ம் தேதி பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

அதேசமயம் சசிகலா தரப்பு அதிமுகவும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் மாறி மாறி விளக்கம் பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மார்ச் 20-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், பதில் அளிக்க சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து 21-ம் தேதி பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.