பிரபாகரனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ராஜீவ்! கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் இந்தியா சென்று சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு, போரில் ஈடுபடவதில்லை என உறுதியிருந்தார்.

எனினும், இந்த உத்தரவாதத்தை மீறி சீனன்குடா பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதுடன், பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தாக்கியிருந்தனர்.

இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக பிரபாகரன் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக ராஜீவ் காந்தி கூறியிருந்தார்.

அப்போது கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஜே.என். டிக்சித்தை அழைத்து, “பிரபரகரன் நம்பிக்கையில்லை, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கட்டளை அதிகாரிக்கு அறிவிக்கவும்” என ராஜீவ் இரகசிய பணிப்புரை விடுத்திருந்தார்.

இது குறித்து மேஜர் ஜெனரல் கிரான் கிங்கிற்கு அறிவிக்கப்பட்ட போது, இந்திய படையினர் பின்னால் சுட மாட்டார்கள், ராஜீவின் உத்தரவை ஏற்க முடியாது என கிரான் கூறியிருந்தார்.

இதனால் பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி பிறப்பித்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.