இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது! வடக்கு முதலமைச்சர்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபதெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்ததை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம்.

முதலில் இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்பது எனது கேள்வி.

அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உணமையான கஸ்டங்களை ஓரளவுக்காகவது தெரிந்து வைத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அதனை செய்யாதது மிகப்பெரும் தவறு என நினைக்கிறேன்.

அத்துடன் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்ளின் விடயத்தில் அக்கறையீனமாக இருப்பது, அரசாங்கம் குற்றவாளிகளாக கணிக்கப்படும் இராணுவத்தோடு சம்மந்தப்பட்டவர்களை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு பிழையான மனோநிலை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இந்த மனோநிலை தொடர்ந்தும் இருந்தால் எங்களால் எந்தவிதமான ஒரு முன்னேற்றத்தையும் காணமுடியாது.

1956 ஆம் ஆண்டு இங்கினியாகலையில் முதன்முதலில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வன்முறைச் செயல் சம்மந்தமாக அதில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கையை அன்று எடுத்திருந்தால் அதற்கு பின்னர் இவ்வாறான பிழை களை நாங்கள் செய்யக் கூடாது என்று மக்கள் நினைத்திருப்பார்கள்.

அவற்றை விட்டுவைத்ததால்தான் தமிழர்களுக்கு எதிராக எங்களால் எதுவும் செய்ய முடியும் யாரும் எதையும் கேட்கமாட்டார்கள் என்றொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும் நாங்கள்.

இதற்காகதான் நாங்கள் சர்வதேச சமூகங்களுடன் பேசி எங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றோம். தொடர்ந்தும் அதை செய்வோம் என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு நிபந்தனையடனான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை வவுனியாவில் எடுத்த தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

என்னைப்பொறுத்தவரை கால அவகாசம் கொடுப்பது பிழையானது. ஏன்னென்றால் இதுவரை காலமும் செய்யப்பட்டதில்மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்தது என்று நாங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் என்று ஒன்று இருக்கிறது. அந்த அலுவலகம் இந்தா வருகிறது எல்லாம் நடைபெறுகிறது என்று கூறினார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

கடைசியாக அது கடதாசியில்தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு அது போய்சேரவில்லை. இதுவரை காலமும் மக்களுக்கு போய் சேர்ந்த விடயங்கள் என்னென்ன?

என்னென்ன நன்மைகளை அரசாங்கம் செய்திருக்கிறுது என்பதை முதலில் சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும், ஆராய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஏதோவொரு அரசியல் காரணங்களுக்காக இன்றும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியாக எனக்குப்படவில்லை. இது என்னுடைய கருத்து.

தலைமைத்துவம் வேறுவிதமான கருத்தை வைத்திருந்தாலும் அதாவது அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் அவ்வாறு கால அவகாசம் கொடுக்கும் காலத்தில் கண்காணிப்பு நடக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதுவும் ஒரு முறை. ஆனாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றாலும் அதை தலைமைத்துவம் கூறி வைத்திருக்கிறது.

எங்களை பொறுத்தவரை இதுவரை காலமும் நடைப்பெற்றதில் மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்திருக்கிறது என்றுதான் அதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.