அர்ஜூனவின் அமைச்சு அமரவீரவுக்கு வழங்கப்படுமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்ய விஜயத்திற்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது மகிந்த அமரவீரவுக்கு மீன்பிடி அமைச்சு பதிலாக துறைமுக அமைச்சு அவருக்கு வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

மீன்பிடித்துறை சார்ந்த அமைச்சு பதவிகள் தங்காலை தொகுதியை சேர்ந்தவர்களிடம் இருப்பதால், மகிந்த அமரவீரவுக்கு வேறு ஒரு பதவியை வழங்கப் போவதாக ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், அர்ஜூன ரணதுங்கவிடம் இருந்து துறைமுகம் சம்பந்தமான அமைச்சு பறிக்கப்படலாம் என அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்டதும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் சந்தித்து தனது அமைச்சு பதவியில் மாற்றங்களை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் அமைச்சரவை மாற்றத்தின் போது அர்ஜூன ரணதுங்கவின் அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா இல்லையா என்பது இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.