ஐ.நா. சபையின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தென் கொரியாவின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா ராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
ஐ.நா. கடும் பொருளாதார தடை விதித்தபோதும், வடகொரியா அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதன் நட்பு நாடான சீனாவும் பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், இன்று சீனா சென்று சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். அப்போது வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி அச்சுறுத்தும் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் வகையிலான செயல்களை ஒடுக்குவதற்கு சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் டில்லர்சன் கூறுகையில், ‘கடந்த இருபது ஆண்டுகளாக வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது பற்றி பேசினோம். அத்துடன், வடகொரியா அரசு சிறந்த பாதையை தேர்வு செய்வதுடன், மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பணியில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். இந்த உறுதிப்பாட்டை இப்போது புதுப்பித்துள்ளோம். அமெரிக்காவுடன்இணைந்து செயல்படுவதற்கு வாங் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்’ என்றார்.
குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டம் தற்போது அபாய அளவைத் தாண்டிவிட்டது என்றும் டில்லர்சன் எச்சரித்துள்ளார்.