ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் தலீபான் தளபதிகள் 2 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்திகா மாகாணம், பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அங்கு தடை செய்யப்பட்ட தலீபான் உள்ளிட்ட இயக்கங்களின் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நார் என்ற பகுதியில் ஒரு காரை இலக்காக வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதிகள் என்றும், அவர்களது பெயர்கள் ஹாரூண் சூய்கேல் வாசில், அஜ்மத் மசூத் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடந்துள்ளது. ஆனால் தகவல்கள் நேற்றுதான் கசிந்துள்ளன. அந்த தளபதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்து, அமெரிக்கா இந்த தாக்குதலை துல்லியமாக நடத்தி முடித்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் லாமான் என்ற இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், அதில் தெற்கு வாஜிரிஸ்தானை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.