எதிரிகளால் உண்டாகும் துன்பங்களை நீக்கும் வீரபத்திரர்!

வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது.

கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் இவருக்கு மட்டுமே வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலை படலும் உரியனவாக உள்ளன.

இவரது ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது.

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் மகாஷ்டமி விரதம். இது வீரபத்திரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்து இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் மேற்கு ராஜ கோபுரத்திற்கு அருகே உள்ளது இந்த ஆலயம்.