தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவன்னன், மனோபாலா, என்.வி.நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கூறிக்கொண்டே போகலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று சொன்னால் மிகையாகாது.
திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கவுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் & ஒருங்கிணைப்பு, ஒலி வடிவமைப்பு, எடிட்டிங் & தொல்லியல், ஸ்டண்ட் இயக்கம், நடன அமைப்பு, உற்பத்தி வடிவமைப்புகள் (கலை) உள்ளிட்ட ஒன்பது கலைகளின் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின் கௌரவ ஆலேசகர்களாக திரு.முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் யூனிவர்சிட்டி), இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் ப்ரியதர்ஷன், இயக்குனர் ராஜீவ்மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.