இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு

இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் ஏற்பட்டுள்ள பாடல் காப்புரிமை மோதல் பட உலகை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் மேடை கச்சேரிகளில் அவரது இசையில் பாடிய பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தால் இனிமேல் பாட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமான கருத்து விவாதங்கள் அனல் பறக்கிறது.

இளையராஜா தரப்பில் அவரது ஆலோசகர் இது குறித்து கூறும்போது, “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியது வழக்கமான நடைமுறைதான். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

சாதாரண மேடை கச்சேரி நடத்துபவர்களிடம் ‘ராயல்டி’ செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது இல்லை. வணிக ரீதியாக பாடல்களை மேடைகளில் பாடி சம்பாதிப்பவர்களிடம் மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டும் என்று கோருகிறோம். இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அவருக்கு சட்ட ரீதியாக வரவேண்டிய ராயல்டியை வழங்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

“இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே பாடல் காப்புரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த பிரச்சினை விரைவில் நல்ல முறையில் சுமுகமாக தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.