அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தை உருவாக்கியது யார்? 44 ஆண்டுகாலமாக நீடிக்கும் சர்ச்சை

யாருக்கு இரட்டை இலை சின்னம் என்ற பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்க… அதிமுகவின் இந்த சின்னத்தையும் கொடியையும் உருவாக்கியது யார்? என்ற சர்ச்சை 44 ஆண்டுகாலமாக நீடித்தே வருகிறது.

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற பஞ்சாயத்து நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி ஊடகம் ஒன்றில் இரட்டை இலையின் வரலாறு வெளியாகி இருந்தது.

அதில் 1973-ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட மாயத்தேவரால் அடையாளம் காணப்பட்டு எம்.ஜி.ஆரால் ஏற்கப்பட்டதுதான் இரட்டை இலை சின்னம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாயத்தேவரும் கூட பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

மாயத்தேவருக்கு உரிமை இல்லை
அதேநேரத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் இரட்டை இலையை தேர்வு செய்தவர் எம்ஜிஆர் மட்டுமே… அதற்கு மாயத்தேவர் உரிமை கோர முடியாது என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

பஞ்சாயத்து கிளப்பிய பாண்டு
கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது நடிகர் பாண்டுவும் திடீரென தாமே அதிமுகவின் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் உருவாக்கியதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆர் தந்த பரிசு
ஓவியக் கல்லூரி மாணவராக இருந்த தம்மை அழைத்து எம்ஜிஆர் அதிமுக கொடியை உருவாக்க சொன்னார்; இதற்காக 5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ10,000 ரொக்கத்தை எம்ஜிஆர் தந்ததாகவும் நடிகர் பாண்டு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

கொடி உருவாக்கிய அங்கமுத்து
உண்மையில் அதிமுகவின் கொடியை வரைந்தவர் கலை இயக்குநராக இருந்த அங்கமுத்து. அங்கமுத்துவுக்கு அறிஞர் அண்ணாவின் பல்வேறு படங்களைக் காட்டியவர் அப்போது பிரபல புகைப்படக் கலைஞராக இருந்த மறைந்த சுபா சுந்தரம். அந்த அங்கமுத்துதான் அதிமுகவின் கொடியை உருவாக்கியவர் என்பதை பலரும் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

யாருக்கு கொடியும் சின்னமும்?
இப்படியான சர்ச்சைகளில் சிக்கிய அதிமுகவின் கொடியும் இரட்டை இலை சின்னமும் யாருக்கு கிடைக்கப் போகிறது? அல்லது தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படுவிடுமா? என்பது நாளை தெரியவரும்.