ஆர்.கே. நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரைத்துறை பிரபலமான கங்கை அமரன் தொகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததினால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவித்தது. இந்த இடத்திற்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பாஜக சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி கங்கை அமரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஆர்.கே. நகர் தொகுதியில் மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்று கூறினார். மேலும், கலைத் துறையைச் சேர்ந்த தனக்கு அரசியல் ஒன்றும் புதியதல்ல என்று கூறியுள்ள கங்கை அமரன், தொகுதி மக்களின் நலனுக்காக வழங்கப்படும் தொகையை மக்களுக்காகவே செலவழிக்க உள்ளதாகவும் மற்றவர்களைப் போன்று அமுக்கி விட மாட்டேன் என்றும் கூறினார்.
மேலும், ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவையான கால்வாய் அடைப்பு, குடிநீர் பிரச்சனை, சாக்கடை கலந்த தண்ணீர், மீனவர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மக்களோடு மக்களாக நின்று மாநில அரசிடம் போராடி வெற்றி காண்பேன் என்று கங்கை அமரன் கூறினார்.
இந்தப் பிரச்சனைகளை எல்லாம் தான் தீர்த்து வைப்பேன் என்று கூறிய கங்கை அமரன், அனைவரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதால், தனக்கு ஆர்.கே. நகரில் எல்லாமே பிளஸ் பிளஸ் பிளஸ்தான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.