“நீயே என் ஊழியன்… உன்வழியாய் நான் மாட்சியுறுவேன்” (எசாயா 49:3) பசுவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை. பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை. அனைத்து உயிர்களுமே பிறருக்கு உழைக்க காண்கின்றேன். என் வாழ்வும், பிறருக்கு உழைக்க வேண்டுமையா என்பது போல மனிதராக பிறந்த நாம் அனைவருமே ஊழியர்களாக (தொண்டர்களாக) வாழத்தான் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இறைவனால் அழைக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே திருவிவிலியத்தில் ஊழியன் என்ற அடைமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். இறைவன் தேர்ந்த ஆபிரகாம், ஆபிரகாமின் வழிமரபினராகிய யாக்கோபு, எகிப்திலிருந்து மக்களை வழி நடத்திய மோசே, இஸ்ராயேலை ஆள அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது மற்றும் யோபு, எசாயா, எரேமியா, எசேக்கியேல், திருமுழுக்கு யோவான், இறுதியாக தன்மகன் இயேசு கிறிஸ்து என திருவிவிலியத்தில் ஊழியன் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆண்டவர் இயேசுவும் ‘பணியாளர்’ என்ற வார்த்தையை இதே பின்னணியில் தன் அன்பு சீடர்களுக்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. நாம் அனைவரும் இறைவனின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். (எசாயா 49:5) நமது வாழ்வும் பணியும் இறைவனை மாட்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அனைவரையும் நமது அன்பால், பணிவாழ்வால் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஆண்டவரின் பிரதிநிதியாக இருந்து அவரை அறிவிக்க வேண்டும். நமது பணியின் வழியாக அவரை நாம் வாழும் சமுதாயத்தில் பிரசன்னப்படுத்த வேண்டும். இறைவனின் அன்பு பிள்ளைகளாக, அவரின் சாட்சிகளாக நாம் வாழ வேண்டும்.
எனவே தான் “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டாய். இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே” என்ற கூற்றிற்கு சொந்தக்காரர்கள் ஆவோம். அப்போது நமது பணிவாழ்வு தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே பயனுள்ள வாழ்வாக வாழ்வோம்.