இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது இசையில் உருவான பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இனிமேல் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என்று அவர் அறிவித்து விட்டார்.
இது, இசை உலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் பகையை மறந்து ஒன்று சேர வேண்டும் என்று பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இளையராஜா நோட்டீசு அனுப்பியதை இசையமைப்பாளர் கங்கை அமரன் கண்டித்து உள்ளார். இசை என்பது பொது சொத்து என்று அவர் கூறியுள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒரு பாடலுக்கான ராயல்டி இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மூவருக்கும் சொந்தமானது என்றும், இளையராஜா வக்கீல் நோட்டீசு அனுப்பியது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், பட அதிபர்களும், பாடலாசிரியர்களும் நோட்டீசு அனுப்பினால் இளையராஜாவே தனது பாடல்களை கச்சேரிகளில் பாட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் பல பாடகர்கள் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து உள்ளனர்.
பின்னணி பாடகர் மனோ கூறியதாவது:-
“இசை என்றதும் நமது ஞாபகத்துக்கு வருபவர்கள் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இருவரும் இசை உலகின் சகாப்தமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில் இருந்தே இவர்கள் இசையிலும் குரலிலும் வந்த அனைத்து பாடல்களையும் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்து வளர்ந்து இருக்கிறோம்.
40 ஆண்டு காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ள இவர்கள், தற்போது 70 வயதை தாண்டி விட்டார்கள். இந்த வயதில் இவர்களுக்குள் பிரிவு எதற்கு? இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து ரசிகர்களும் கவலையில் இருக்கிறார்கள். சட்டரீதியான பிரச்சினையில் இருந்து இருவரும் மீண்டு சந்தோஷமாக வெளியே வந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
பாடகி எம்.எம்.ஸ்ரீலேகா, பாடகி சுனிதா
பின்னணி பாடகி சுனிதா கூறியதாவது:-
“இளையராஜா பாடல்கள் இல்லாமல் உலகில் எங்குமே தமிழ், தெலுங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தவே முடியாது. இப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மட்டும்தான் நோட்டீசு வந்து இருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற பாடகர்களுக்கும் இதுபோல் தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீசு வரலாம். இளையராஜா செய்தது மாதிரி மற்ற இசையமைப்பாளர்களும் நோட்டீசு அனுப்பினால் பாடகர்களின் எதிர்காலமே இருளடைந்து விடும்”.
இவ்வாறு அவர் கூறினார்.
இசையமைப்பாளர் கீரவாணி சகோதரியும், பின்னணி பாடகியுமான எம்.எம்.ஸ்ரீலேகா கூறியதாவது:-
“இளையராஜாவின் இசைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் உதவி செய்து இருக்கிறது. இருவரும் சேர்ந்து இருந்தால்தான் ரசிகர்களுக்கு சந்தோஷம். இவர்களுக்குள் பாடல் காப்புரிமை சட்ட பிரச்சினை வந்து இருப்பது வேதனை அளிக்கிறது. பாலையும் தண்ணீரையும் பிரித்து விடுங்கள் என்றால் எப்படி முடியும்? அதுமாதிரி இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களை யாராலும் பிரிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு பாடலாசிரியர்கள் அனந்த் ஸ்ரீராம், ராமஜோகையா சாந்தினி ஆகியோர் கூறும்போது, “காப்புரிமை சட்டப்படி கச்சேரியில் பாடப்படும் பாடல்களுக்கான ராயல்டியில் தயாரிப்பாளருக்கு 50 சதவீதமும், இசையமைப்பாளருக்கு 25 சதவீதமும், பாடலாசிரியருக்கு 25 சதவீதமும் வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் இளையராஜா நோட்டீசு அனுப்பி இருக்கிறார். இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி, சித்ரா ஆகியோர் தமிழ், தெலுங்கில் பாடிய அனைத்து பாடல்களுமே பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு இசை சிகரங்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.