அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஓபிஎஸ் அணி மனு கொடுத்தது. இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் முன்பாக இரு அணி சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வாதங்களைக் கேட்ட பின்னர் தேர்தல் ஆணையம் தமது முடிவை அறிவிக்க உள்ளது.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையவும் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்கினாலும் மற்றொரு அணி நீதிமன்றப் படிகளேற வாய்ப்புண்டு.
இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் தற்போதைக்கு இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாம். ஏனெனில் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான விவாதம் மட்டுமே நடைபெறுகிறது. சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட விவாதம் பின்னர் நடைபெற உள்ளது.
அந்த விவாதமும் நடைபெற்று முடிந்த பின்னர் இரட்டை இலை, சசிகலா நியமனம் தொடர்பான இறுதியான முடிவை அறிவிக்கலாம் என்பது தேர்தல் ஆணையத்தின் திட்டம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் ஏற்கனவே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.