காலக்கொடுமை! ஓபிஎஸ் அணியில் தீபா எதிர்பார்க்கும் உயர்பதவி இதுதானாம்!

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குள்ளே தீபா ஒன்றும் சும்மா முடங்கிவிடவில்லையாம்… ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவி கேட்டு பிசியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெ. நினைவிடத்தில் தீபா- ஓபிஎஸ் சந்திப்பு அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவித்தனர்.

அதன்பின்னர் ஓபிஎஸ் அணி பக்கம் தீபா போகவில்லை. பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை உருவாக்கியதாக அறிவித்தார் தீபா.

அப்போது ஓபிஎஸ் அணியில் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; பொதுச்செயலர் பதவியும் தமக்கே தர வேண்டும் என தீபா அடம்பிடித்ததாகவும் இதை ஏற்க ஓபிஎஸ் அணி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதன் பின்னரும் ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தையை தீபா கைவிடவில்லை.

தனிப் பேரவை, தனித்துப் போட்டி என ஒரு பக்கம் அறிவித்துக் கொண்டே ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தையையும் தீபா நடத்திக் கொண்டே இருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் தீபா, அதிமுக பொதுச்செயலர் பதவியை தமக்கு தந்தே ஆக வேண்டும் என்பதில் ரொம்பவே அடம்பிடிக்கிறாராம்.

இதனால்தான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப் போகாமல் வீட்டிலேயே இருந்தாராம் தீபா. தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தீபா கேட்கிறபடி பொதுச்செயலர் பதவியை கொடுப்பதாக உறுதியளிக்கலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளதாம் ஓபிஎஸ் அணி.