ஜெனிவாவில் கடும் ஏமாற்றமடைந்த இலங்கை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த இலங்கை தொடர்பான விவாதத்தில், இலங்கை பாரிய ஏமாற்றமடைந்துள்ளது.

இலங்கை தொடர்பான விவாதத்தில், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உரையை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இலங்கைக்கு பதில் உரை ஆற்றும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் உதில் அறிக்கையை சமர்ப்பிக்க 5 நிமிட அவகாசம் அளிக்கப்பட்டது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இலங்கை சார்பில் பதில் அறிக்கையை வாசித்தார். எனினும் அவர் தனது அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த போதே, பேரவைத் தலைவர், குறுக்கிட்டு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக உரையை நிறுத்தினார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய பதிலை வழங்கிக் கொண்டிருந்த போதே இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை இடைநிறுத்தப்பட்டது. இதனால் இலங்கை தரப்பின் முழுமையான பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றும் நாளையும் நடக்கும் அமர்வுகளில் பங்கேற்பதற்காகவே ஹர்ஷ டி சில்வா ஜெனிவாவுக்குச் சென்றிருந்தார்.

இன்றைய அமர்வுகளில் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மற்றும் மனோ தித்தவெல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை சூடான் நாட்டுப் பிரதிநிதி இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை வரவேற்று உரையாற்றியதை அடுத்து, அருகில் இருந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அவருக்கு கைலாகு கொடுத்தார்.