ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது ஜெனிவாவில் இன்று விவாதம் இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்தது.
இதில், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
எனினும், இந்தியா சார்பில் இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. இந்தியப் பிரதிநிதி இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள் தொடர்பான இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்வதற்குப் பலரும் ஆர்வம்காட்டிய போதும், இந்தியா மௌனம் காத்தமை அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.