இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்ததை நம்பி சென்ற பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட பகுதிகளை நோக்கியும் கடும் செல் வீச்சு தாக்குதலும், விமான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற மே மாதம் 14,15,16,17ஆம் திகதிகளில் அதிகளவான பொது மக்கள் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடகிழக்கில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கே.தேவராசா இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது இறுதி கட்ட யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டன. இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்கானவர்களின் உடல்கள் கருகிவிடும்.
குண்டுகள் வெடிக்கும். எரிந்துகொண்டே குண்டுகள் விழும். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நெருப்பால் சுட்டதை போன்று மாறிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டதோடு அதற்கான ஆதரங்கள் பல வெளியாகியுள்ள நிலையிலும், கண் கண்ட சாட்சியங்களாக நாங்கள் இன்றும் இருக்கின்றோம். என்பதோடு படுகொலை செய்யப்பட்ட எமது இனத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.
இதனை யாரும் மறுக்க முடியாது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறவேண்டும்.
அதைவிடுத்து, இலங்கை அரசாங்கம் அதனை மறைத்து எம்மையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகளை படையினரிடம் கையளித்தோம். உடனடியாக விடுதலை செய்வதாக தெரிவித்த படையினர் எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் எமது உறவுகள் திரும்பி வரவில்லை.
அரசாங்கம் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் மௌனம் காத்து வருகின்றது. இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து 287 பேர் படையினரிடம் கையளிக்கப்பட்டனர். அதற்கான தரவுகளும் எங்களிடம் இருக்கின்றன. எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்த தர்மம் மீறப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதியை கோரி இன்று வீதியில் இருக்கின்றனர். எனவே, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட எம்மவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு கால அவகாசம் வழங்காது நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டுமென குறிப்பிட்டார்.