லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் ராஜபக்ஸக்கள்?

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னணியில் ராஜபக்ஸக்களே இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற காட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கியால் சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று ஏற்கனவே மரண பரிசோதனை அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படுகொலையின் பின்னணியில் ராஜபக்ஸக்களே இருக்கிறார்கள் என்றும் உறுதியாகக் கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களைத் தவிர இக்கொலையை செய்ய வேண்டிய தேவை வேறு யாருக்கு அப்போது இருந்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

லசந்தவை கொலை செய்த அந்தக் கொலைக் குழுவின் பின்னணியில் ராஜபக்ஸக்களே இருக்கிறார்கள் என்பதை எம்மால் நிச்சயமாக கூறமுடியும் என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இவர்களால் அப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாம் இவ்விடயத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டோம். லசந்தவின் படுகொலையில் வெளிவந்துள்ள இந்த இரண்டு மரண அறிக்கைகள் தொடர்பிலும் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுப்போம்.

லசந்தவின் விவகாரம் மட்டுமன்றி தாஜுதீனின் மரணம் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் கொலை மற்றும் தாக்குதல்கள் குறித்தும் நாம் விசாரணைகளை மேற்கொள்வோம் எனவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.