புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்து விட்டது : நீதிபதி அறிவிப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், குறித்த வழக்கு விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதால் வித்தியாவின் குடும்பத்தினருக்கும் பெற்றோருக்கும் நீதவான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள், குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

விசாரணைகள் நேர்மையாக நடைபெறுகின்றன. 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுகின்றோம் என கூறிக்கொண்டு வருபவர்களிடம் ஏமாற வேண்டாம்.

அவர்களை நம்பி பணம் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த வழக்கு விசாரணை குறித்து ஏதேனும் தெரிவிக்க இருப்பின் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நீதிமன்றில் முன்னிலையாகி, தமது வாக்குமூலத்தை தெரிவிக்க முடியும்” என நீதவான் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகளை 05ஆம் திகதிக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் ஒத்திவைத்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.