மீண்டும் முடக்கப்பட்ட இரட்டை இலை… 29 வருடத்திற்குப் பிறகு!

எம்.ஜி.ஆர். மறைவின்போது முடக்கப்பட்ட இரட்டை இலை இப்போது மீண்டும் ஒரு முடக்கத்தைக் கண்டுள்ளது.

அதிமுகவினருக்கு இது நிச்சயம் கருப்பு நாள். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவுக்கும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கும் சசிகலா கும்பலால் ஒரு பெரும் சோதனை வந்துள்ளது.

அதிமுக என்ற பெயரையே பயன்படுத்தக் கூடாது, இரட்டை இலை சின்னமும் முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

யாருக்கும் கிடையாது
இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது. அதிமுக வேட்பாளராகவும் யாரும் போட்டியிடவும் முடியாது. தினகரனும் சரி, மதுசூதனனும் சரி இருவருமே சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என்பது சுவாரஸ்யமானதாகும். மறைந்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, திண்டுக்கல் இடைத் தேர்தலில் தனது முதல் அங்கீகாரத்தைப் பெற்றது. இப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முடக்கத்தைக் கண்டுள்ளது.

1972 முதல்
1972ம் ஆண்டு பிறந்தது அதிமுக. 1973ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அதுதான் திண்டுக்கல் இடைத் தேர்தல். அதில் மாயத்தேவர் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவர்தான் இரட்டை இலையில் வென்ற முதல் அதிமுககாரர். அதன் பிறகு தமிழகத்தின் வரலாற்றில், மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்ற சின்னம் இரட்டை இலை.

1987ல் சோதனை

ஆனால் 1987-ல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அந்த சின்னத்திற்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. அதிமுக உடைந்ததால் சின்னமும் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போட்டியிட்டது. மறுபக்கம் ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து ஜானகி அரசியலை விட்டு விலகினார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றுபட்டது. மீண்டும் துளிர்த்தது இரட்டை இலை.

சசிகலா கும்பலால்
அன்று முதல் மீண்டும் தமிழகத்தை வலம் வந்த இரட்டை இலைக்கு சசிகலா கும்பலால் இப்போது மீண்டும் முடிவு கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில் இரும்புக் கோட்டை போல காணப்பட்டது அதிமுக. ஆனால் இன்று அவரது மறைவுக்குப் பிறகு காயலான் கடையில் போடப்பட்ட இரும்பு போல மாறி நிற்கிறது. இப்போது சின்னத்தையும் அதிமுக என்ற பெயரையும் இழந்து நிற்கிறார்கள் அதிமுகவினர்.

2வது முடக்கம்
அதிமுக தொடங்கப்பட்ட பின்னர் அதில் ஏற்பட்ட புரட்சிகள் 4. முதலில் எஸ்.டி.எஸ். வெளியேறினார். பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒரு பிரிவு ஏற்பட்டது. திருநாவுக்கரசர் பிறகு வெளியேறினார். சமீபத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா – ஓ.பி.எஸ். என இரு பிரிவாக அதிமுக பிளந்தது. அதேபோல சின்னம் முடக்கப்படுவது இது 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.